கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு ’செவாலியர் விருது’ அறிவிப்பு

கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முக்கியமான கலை இயக்குனர் தோட்டா தரணி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

குறிப்பாக இவரது கைவண்ணத்தில் வெளியான ‛நாயகன்’ பட வரும் தாராவி செட், காதலர் தினத்தில் வரும் இன்டர்நெட் கபே, சிவாஜி படத்தில் வரும் பாடல்கள் மற்றும் காட்சிகளுக்கான செட் போன்றவை தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருக்கும். இதுதவிர பல்வேறு படங்களில் இவரது கலை இயக்க பங்களிப்பு பெரிதும் பேசப்பட்டது. தேசிய விருது, பல்வேறு மாநில திரைப்பட விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் கலை துறையில் இவரது சேவையை பாராட்டி பிரான்ஸ் கலை மற்றும் கலாசார அமைப்பின் சார்பில் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நவம்பர் 13ல் நடக்கும் விழாவில் பிரான்ஸ் தூதர், தோட்டா தரணிக்கு செவாலியர் விருதை வழங்குகிறார்.

செவாலியர் விருது என்பது பிரெஞ்சு அரசாங்கத்தல் வழங்கப்படும் உயரிய விருதாகும். உலகெங்கிலும் கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விலங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக இவ்விருது 1957 முதல் வழங்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு 1995ஆம் ஆண்டும் கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டும் வழங்கப்பட்டது. தற்போது தோட்டா தரணியும் இப்பட்டியலில் இணைந்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.