2022-23 ம் ஆண்டில் கிட்டத்தட்ட 50 அரசு இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய தகவல் தொடர்பு துறை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியதாவது: 2020ம் ஆண்டில் 59 அரசு இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டில் 42 இணையதளங்களும் 2022ம் ஆண்டில் 50 அரசு இணையதளங்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இந்த ஹேக் செய்யப்பட்ட இணையதளங்களில் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. மேலும் 2022ம் ஆண்டில் 3,24,620 முறைகேடுகள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் 2,83,581 முறைகேடுகளும் 2021ம் ஆண்டில் 4,32,057 முறைகேடுகளும் கண்டறியப்பட்டும் தடுக்கப்பட்டும் உள்ளன.
பல்வேறு சமயங்களில் இந்திய சைபர்ஸ்பேஸ் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ‘ஹிட்டன் சர்வர்ஸ்’ மூலம் இந்த தாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சிஇஆர்டி அமைப்பு எடுத்து வருகிறது. சைபர் தாக்குதல் நிகழும் போது சிஇஆர்டி அமைப்பு சம்பந்தப்பட்ட அமைப்புக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி வருகிறது.
சமீப காலங்களில் எவ்வாறு சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டது, எப்படி தாக்குதல் நடந்தது? இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து மீள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறோம். இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.







