அரசியல் புரிதல் இன்றி பேசுகின்றனரா தவெக நிர்வாகிகள்? – உண்மை என்ன?

This News Fact Checked by ‘Newsmeter‘ ஊடக விவாதங்களில் அரசியல் புரிதல் இன்றி பேசும் தவெக நிர்வாகிகள் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையா? உண்மை சரிபார்ப்பின் மூலம் கண்டறியப்பட்டது என்ன?…

Are the Thaweka administrators speaking without political understanding? - What is the truth?

This News Fact Checked by ‘Newsmeter

ஊடக விவாதங்களில் அரசியல் புரிதல் இன்றி பேசும் தவெக நிர்வாகிகள் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையா? உண்மை சரிபார்ப்பின் மூலம் கண்டறியப்பட்டது என்ன?

“தவெகவின் அரசியல் புரிதல்… சிரிக்காமல் பார்க்கவும்” என்ற கேப்ஷனுடன் விஜய் ரசிகர் மன்றம் நிர்வாகி எஸ்.பி.கே. தென்னரசு தந்தி ஊடகத்தில் நடைபெற்ற ஆயுத எழுத்து விவாதத்தில் பங்கேற்று பேசிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “எப்போது இருந்து ஊழல் உள்ளது என்று தொகுப்பாளர் தென்னரசுவிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு, ஒரு பத்து ஆண்டுகள் இருக்குமா?” என்று பதிலளிக்கிறார் தென்னரசு.

இதற்கு எதிர்வினையாற்றும் தொகுப்பாளர், “அப்போ, 2011ஆம் ஆண்டு அதிமுகவிற்கு விஜய் குரல் கொடுத்தாரே. அப்போது, ஊழல் இல்லையா” என்கிறார். தொடர்ந்து, “அதிமுகவிடம் 15 சீட் கேட்டோம் என்று விஜய்யின் தந்தையே கூறினாரே, அப்போ மட்டும் அந்த கட்சி (அதிமுக) நல்ல கட்சியா…” என்கிறார். இதற்கு பதிலளிக்கும் தென்னரசு, “தளபதியிடம் தான் தாங்கள் கேட்க வேண்டும் என்கிறார்.

மேலும், தொகுப்பாளர் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பவே, நீங்கள் தளபதியிடம் தான் கேட்க வேண்டும் என்று தென்னரசு மீண்டும் மீண்டும் கூறுகிறார். இறுதியாக, அவருடைய (நடிகர் விஜய்) கருத்தை தங்களிடம் (தென்னரசு) கேட்கவில்லை உங்களுடைய கருத்தை தான் கேட்கிறேன் என்று தொகுப்பாளர் கேட்க, “அதற்கும் தளபதியிடம் தான் கேட்டு சொல்ல வேண்டும்” என்கிறார் தென்னரசு. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விவாதங்களில் பதிலளிக்க திணறுவதாக கூறி இக்காணொலியை பரப்பி வருகின்றனர்.

உண்மை சரிபார்ப்பு:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இந்த விவாதம் 2018ஆம் ஆண்டு நடைபெற்றது என்று தெரியவந்தது. காணொலியில் தென்னரசை விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தற்போது விஜய் ரசிகர் மன்றம் தமிழக வெற்றிக் கழகம் என்று நடிகர் விஜய்யால் துவக்கப்பட்ட கட்சியாக இயங்கி வருகிறது. இதன் மூலம் வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவருகிறது.

தொடர்ந்து, இது குறித்த உண்மையை கண்டறிய காணொலியில் இருக்கும் விஜய் பேச்சு: விளம்பரமா? அரசியல் முன்னோட்டமா?” என்ற தலைப்பை கொண்டு யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி, ஆயுத எழுத்து சர்க்கார் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு: விளம்பரமா? அரசியல் முன்னோட்டமா? என்ற தலைப்பில் தந்தி ஊடகம் நடத்திய விவாதத்தின் முழு நீளக் காணொலி கிடைத்தது.

அதன் 22:19 முதல் 22:25 வரையிலான பகுதியில் தற்போது வைரலாகும் அதே காணொலி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலி பழையது என்று உறுதியாகிறது. மேலும், எஸ்.பி.கே. தென்னரசு தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு:

தேடலின் முடிவாக த.வெ.க நிர்வாகிகள் அரசியல் புரிதல் இன்றி பேசுவதாக வைரலாகும் காணொலி 2018-ம் ஆண்டு நடந்த ஊடக விவாதத்தின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Note : This story was originally published by ‘Newsmeter’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.