“விவசாயிகளை தீவிரவாதிகள் எனக்கூறுவதா?” எனக்கேட்டு கங்கனா கன்னத்தில் அறைவிட்ட பெண் காவலர்.. காவல்துறை நடவடிக்கை!

சண்டீகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய பாதுகாப்பு படை பெண் காவலர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  நாடு முழுவதும்…

சண்டீகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய பாதுகாப்பு படை பெண் காவலர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து வரும் ஜூன் 9 ஆம் தேதி மோடி பிரதமராக ஆட்சி அமைக்கவுள்ளார். இதுதொடர்பாக நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மண்டி தொகுதியின் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும், அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரிக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது திடீரென அந்த அதிகாரி, கங்கனாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கங்கனா ரனாவத் விஸ்தாரா விமானம் மூலம் மதியம் 3 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதனையடுத்து இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில்,

“ஊடகங்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடம் இருந்து ஏராளமான அழைப்புகள் எனக்கு வருகின்றன. யாரும் பயப்பட வேண்டாம். நான் பாதுகாப்பாக, நன்றாக இருக்கிறேன். எனது பாதுகாப்புச் சோதனையை முடித்து நான் திரும்பியபோது ஒரு CISF அதிகாரி என்னை அடித்து திட்டினார். நான் அவரிடம் இதுபற்றி கேட்கும்போது விவசாயிகளை ஆதரிப்பதாக கூறினார். நான் பாதுகாப்பாகத்தான் இருக்கிறேன். ஆனால் பஞ்சாப்பில் வளர்ந்து வரும் தீவிரவாதம் மற்றும் வன்முறையை எப்படி கையாள்வீர்கள்? நன்றி” என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இதுகுறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கங்கனா ரனாவத்தை அறைந்த விவகாரத்தில் பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.