தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் விலை உயருகிறதா? முதல்வர் விஜயிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!

டிக்கெட் கட்டண உயர்வு, அதிகாலை 6 மணி காட்சிக்கு அனுமதி உள்ளிட்ட 9 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் விஜயிடம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகளின் செயல்பாடுகள், டிக்கெட் கட்டண நிர்ணயம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், திரையரங்குகளின் வருவாயை அதிகரிக்கவும், செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் எனத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.

டிக்கெட் விலை ரூ.250 ஆக உயர்த்த கோரிக்கை

தற்போது அதிகபட்சமாக ரூ.150 ஆக உள்ள திரையரங்க டிக்கெட் விலையை, பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் பராமரிப்புக் கட்டணங்கள் தவிர்த்து ரூ.250 ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டிக்கெட் விலையில் தானாகவே 10 சதவீத உயர்வை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பராமரிப்புக் கட்டணமும் உயர்த்தப்பட வேண்டும்

திரையரங்குகளில் வசூலிக்கப்படும் தியேட்டர் பராமரிப்புக் கட்டணத்தை (Theatre Maintenance Charges – TMC) ஒரு டிக்கெட்டுக்கு ரூ.6-லிருந்து ரூ.10 ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மின்கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்

தகுதியுள்ள திரையரங்குகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக (MSME) அல்லது தொழிற்துறை நிறுவனங்களாக அங்கீகரிக்க வேண்டும். இதன் மூலம் திரையரங்குகளுக்கு சலுகை விலையில் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் புரொஜெக்டர் ஆபரேட்டர் நிபந்தனை நீக்கம்

டிஜிட்டல் புரொஜெக்ஷன் தொழில்நுட்பத்தில் திரைப்படங்களைத் திரையிடும் திரையரங்குகளுக்கு, உரிமம் பெற்ற புரொஜெக்டர் ஆபரேட்டர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கூடுதல் திரைகள் அமைக்க அனுமதி

ஏற்கெனவே செயல்பட்டு வரும் திரையரங்கு வளாகங்களுக்குள்ளேயே கூடுதல் திரைகளை (Additional Screens) அமைப்பதற்கான ஒழுங்குமுறை அனுமதிகளை எளிமைப்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளுக்கான ‘சி-படிவம்’ (C-Form) உரிமத்தைப் புதுப்பிக்கும் கால அவகாசத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் அல்லாத நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி

திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC) சான்றிதழ் தேவையில்லாத நேரலை விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட திரைப்படம் சாராத நிகழ்ச்சிகளையும் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திரையரங்குகளைத் திரைப்படத் திரையிடலுக்கு மட்டுமின்றி, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாலை 6 மணிக்கே முதல் காட்சி

தற்போது திரையரங்குகள் காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை செயல்பட அனுமதி உள்ளது. இந்த நேரத்தை மாற்றி, காலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை திரையரங்குகளை இயக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்ற தற்போதைய நடைமுறையைத் தொடரவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறு டிக்கெட் கட்டண உயர்வு முதல் திரையரங்குகளின் செயல்பாட்டு நேர மாற்றம் வரை மொத்தம் 9 முக்கியக் கோரிக்கைகளைத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முதலமைச்சர் விஜயிடம் முன்வைத்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் அரசின் பரிசீலனைக்குச் செல்லும் நிலையில், திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.