“அஜித் சாருக்கும் எனக்கும் போட்டியா?” நடிகர் அருண் விஜய் அளித்த சுவாரசிய பதில்!

வணங்கான் திரைப்படமும், குட் பேட் அக்லி திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தனக்கும், அஜித்துக்கும் எந்தவித போட்டியும் இருக்காது என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாலா, அருண் விஜயை…

வணங்கான் திரைப்படமும், குட் பேட் அக்லி திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தனக்கும், அஜித்துக்கும் எந்தவித போட்டியும் இருக்காது என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாலா, அருண் விஜயை வைத்து ‘வணங்கான்’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று அருண் விஜயின் 47-ஆவது பிறந்தநாளை ஒட்டி, படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்தது.

இதனிடையே தனது பிறந்தநாளை ஒட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்த அருண் விஜய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“இன்று எனது பிறந்தநாளை ஒட்டி, ‘வணங்கான்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயமாக ‘வணங்கான்’ திரைப்படம் என்னுடைய கரியரில் மிகவும் முக்கியமான ஒரு திரைப்படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. பாலா சாருக்கு நன்றி.

ஒரு நடிகரா என்னை வேறு பரிணாமத்தில் இப்படம் காட்டும். இந்தப் படத்தில் நான் கஷ்டப்படவில்லை. இஷ்டப்பட்டுதான் எல்லா விஷயங்களையும் செய்தேன். பாலா சாருடன் இனணந்து பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவமாகத்தான் இருந்தது. ரசிகர்களுக்கும் இத்திரைப்படம் சிறந்த படமாக இருக்கும்” என்றார்.

இதனைத்தொடர்ந்து அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. அஜித் சாருக்கும், உங்களுக்கும் போட்டி இருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அஜித் சார் உச்சம். அவருக்கு யாரும் போட்டி கிடையாது. அவருடைய ரசிகர்களும் என்னை நேசித்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக போட்டி எதுவும் கிடையாது” என்று பேசியிருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.