தூத்துக்குடி மாவட்டம், கொற்கை அகழாய்வில் கிடைத்த சீன பானை ஓடுகள் மூலம், தமிழர்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வெளிநாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. ஆறு மாதமாக நடைபெற்று வரும் ஆய்வுப்பணியில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குறிப்பாக 9 அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்கள் வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் செங்கல் கட்டுமான அமைப்பு, சங்கு இருக்கும் தொழில் கூடம் இருந்ததற்கான ஆதாரங்கள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீன நாட்டில் பயன்படுத்தப்படும் பானைகளின் ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கத்திய நாடுகள், அரேபியா மற்றும் ரோமானிய நகரத்தின் பானை ஓடுகளும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொருநை நாகரிகத்தின் காலம் கிமு 1,155 என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறித்த நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சீன பானை ஓடுகள், அகழாய்வில் மேலும் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. இதன்காரணமாக, தமிழர்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, வெளிநாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.









