நிதிஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன், ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதிஷ் திவாரி இயக்கும் ராமாயணம் திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யஷ் ராவணனாக வருகிறார். இந்த படத்தில் அனுமானாக நடிக்க சன்னி தியோல், கும்பகர்ணனாக நடிக்க பாபிதியோல் ஆகியோரை அணுகி பேசி வருகிறார்கள்.
இதுபோல் ராவணனின் தம்பி விபீஷணன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது. ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுடன், பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஹான்ஸ் ஜிம்மர் (66) 1980 முதல் இசையமைத்து வருகிறார். இவர் 150 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைதுள்ள நிலையில், 2 முறை ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார்.







