இலாகா மாற்றத்திற்கு ஒப்புதல் : செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

அமைச்சரவை இலாக்கா மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை…

அமைச்சரவை இலாக்கா மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர்  கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை  நிறைவடைந்ததையடுத்து, அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார் எனவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளும், மருந்து மாத்திரைகளும் எடுத்துக் கொண்டார் எனவும், அவருக்கு கட்டாயமாக விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அமலாக்கத்துறை விசாரணை காவல் கோரிய மனு மீதான விசாரணை இன்னும் உத்தரவு பிறப்பிக்கபடவில்லை.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளான மின்துறை கூடுதலாக அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு துறை கூடுதலாக அமைச்சர் முத்துசாமிக்கும் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஆளுநரிடம் பரிந்துரை செய்தார். முதலமைச்சரின்  பரிந்துரை கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாலை செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் பொன்முடி ” செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு ஆளுநர் கோரியதாகவும்  செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை பிற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கும் அரசின் பரிந்துரையையும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்ததாகவும்”  தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிட்டுள்ளதாவது..

“ அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வைத்த துறைகளான மின்துறை கூடுதலாக அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. ஆனால்  செந்தில்பாலாஜி, குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டு, நீதிமன்றக் காவலில் இருப்பதால், அமைச்சராக தொடர்வதற்கு ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.