அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு வருமான வரித்துறை சம்மன்; ஜூன் 20-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், ஜூன் 20ம்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், ஜூன் 20ம்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து, அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அதோடு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை  நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு 5 நாட்களுக்கு முன்பாக ரத்த கட்டு ஏற்படாமல் இருக்க ஹெப்பரைன் ஊசி, ஏஸ்ப்ரின் மாத்திரைகள் உள்ளிட்ட மாத்திரைகளை நிறுத்தப்பட வேண்டும். அதன் பிறகு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகே அறுவை சிகிச்சை எப்பொழுது செய்யலாம் என்ற தேதியை மருத்துவர்கள் இறுதி செய்வார்கள்.

ஆனால் செந்தில் பாலாஜிக்கு நேற்றுடன் இந்த மருந்துகள் செலுத்துவது நிறுத்தப்பட்டது. அதனால் 3 – 5நாட்களுக்கு பிறகே மருத்துவர்களின் கண்காணிப்பில் பரிசோதனை மேற்கொண்டு அதன் பிறகே அறுவை சிகிச்சைக்கு செந்தில் பாலாஜி உட்படுவார். இதனால் 2 நாட்களுக்கு பிறகே செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை தேதி உறுதி செய்யப்படும் என காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை முதலமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியிடமிருந்த மற்றொரு துறையான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி துறைகளில்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு கூறினாலும், அவர் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டு, நீதிமன்றக் காவலில் இருப்பதால், அமைச்சராக தொடர்வதற்கு ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல் முற்றி வருகிறது.

இந்த பரபரப்பு ஒருபுறம் இருக்க செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு முன்பாக கரூரில் உள்ள அவரது சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அந்த சோதனை முடிந்த பின் வருமான வரித்துறை சார்பாக சம்மன் ஒட்டப்பட்டு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறியிருந்தது. இந்த நிலையில் வரும் 20ம்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அசோக்கிற்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் வழங்கியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.