தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச சந்தால் பழங்குடியின மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற நமது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களைத் திட்டமிட்டே அவமானப்படுத்திய மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அவர்களின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.
தமது மாநிலத்திற்கு வருகை தரும் நாட்டின் மூத்த குடிமகளான குடியரசுத் தலைவரை, நேரில் சென்று வரவேற்க வேண்டும் என்ற அடிப்படை அரசு பொறுப்பைக் கூட அறியாத மம்தா பேனெர்ஜிக்கு மாநிலத்தின் முதல்வராக நீடிக்க என்ன தகுதி இருக்கிறது? ஒருவேளை நமது மாண்புமிகு குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தைச் சார்ந்தவர் என்பதால் மேற்கு வங்க முதல்வரும் அவரது அமைச்சர்களும் பாரபட்சமாக நடந்து கொண்டனரா?
அதுமட்டுமன்றி ஏற்கனவே மாநாடு நடக்கவிருந்த இடத்தைக் கடைசி நேரத்தில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு வேறொரு இடத்தில் மாற்றியமைத்து, சந்தால் பழங்குயின மக்களை அலைக்கழித்து, மாநாட்டிற்கு வரும் கூட்டத்தைத் திட்டமிட்டே நீர்த்துப் போகச் செய்யுமளவிற்கு பழங்குடியின மக்களின் மீது மேற்கு வங்க முதல்வருக்கு அப்படியென்ன வெறுப்பு? பழங்குடியின மக்களில் இருந்து உருவான முதல் குடியரசுத் தலைவருக்கு மேற்குவங்க முதல்வர் அளிக்கும் மரியாதை இதுதானா?
நமது தாய்நாட்டையும், தாய்நாட்டின் பூர்வகுடிகளையும் தங்களது தோழமைத் தலைவர்கள் தொடர்ந்து அவமானப்படுத்துவதை, சமூகநீதியின் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அறிவாலயத்தின் தலைவர்கள் சகித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடு”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







