காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற உயர்நீதிமன்றம் உத்தரவினை பின்பற்றியே, கோயில் செயல் அலுவலர்கள் நியமன நடைமுறைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர் நியமிக்கப்படுவதாக ஸ்ரீதரன் மற்றும் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில், “அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு பரிந்துரையின் அடிப்படையிலேயே அடிப்படை கல்வித்தகுதியுடன் ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.” என அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும்,
“இந்து சமய அறநிலையத் துறை பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள்” என்றும் “விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கருதினால், இணை ஆணையர் அல்லது துணை ஆணையர் அணுகி முறையிடலாம்.” என்றும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.








