கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் (B.Sc.,) பாடப் பிரிவுகளுக்கு இன்று முதல் ஜூலை 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2022-23ஆம் கல்வியாண்டில் இளமறிவியல் பாடப் பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவையை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி துவங்கிவைத்தார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று மாலை 5 மணி முதல் இணையதளம் செயல்படத் துவங்கும். இன்று மாலை 5 மணி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்பு கல்லூரிகளில் 2,148 இடங்களும், 28 இணைப்புக் கல்லூரிகளில் 2,337 இடங்களில் 12 இளமறிவியல் பாடப் பிரிவுகளில் சேர
http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு , இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப் பிரிவு போன்ற அனைத்தும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்
12 இளமறிவியல் பாடப் பிரிவுகளில் 971 இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே விண்ணப்பத்தில் விருப்ப பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்ய முடியும். ஒரே நபர் ஒவ்வொரு பாட பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. இணையதளம் தவிர பிரத்யேக எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலை பாடப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. நீட் தேர்வு ரிசல்ட் வந்தவுடன், வேளாண்மை பாடத் திட்டங்களுக்கான அட்மிஷன் பணிகள் துவங்கும். செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் துவங்கும் என்றார்.
-ம.பவித்ரா







