உலகம் முழுவதும் பல பெரு நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட், கூகுள் என மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஆல்பபெட் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
சூழல் இப்படி இருக்கையில் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் பெருநிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் நிறுவனம் இதுவரை பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
கொரோனா காலக்கட்டத்தின் போது பல பெரு நிறுவனங்கள் அதிகமான ஊழியர்களை பணியில் அமர்த்தின. ஆனால், அதன்பிறகு தற்போது பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதால் அந்த நிறுவனங்களால் ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ளமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றன. ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த கொரோனா காலக்கட்டத்தின் போது அதிக ஊழியர்கள் பணிக்கு எடுக்கவில்லை.
2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 20 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. ஆனால் இதே காலக்கட்டத்தில் ஆல்பபெட் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை இதே காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட இருமடங்கானது. இந்த இரண்டு நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டன. ஆனால் அப்பிள் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மாறாக தற்போது பல்வேறு பிரிவுகளில் ஊழியர்களை பணியில் அமர்த்தி வருகிறது.







