செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளைக்கு விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்று எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில்பாலாஜி மீதான கைது நடவடிக்கை சட்டப்பூர்வமானது எனக்கூறி, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில்,செந்தில்பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.அதேபோல அமலக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் அதே அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.







