விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர போலீசார் ஆஜர்படுத்தினர்.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது 371 கோடி ரூபாய் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான முறைகேட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்தவற்காக அவரது சொந்த ஊரான நந்த்யால் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு டிஐஜி தலைமையிலான போலீசார் சென்றனர். அப்போது கைதுக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பிய சந்திரபாபு நாயுடு இது சட்டவிரோதம் என போலீசாரிடம் தெரிவித்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த தெலுங்கு தேசம் தொண்டர்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு சந்திரபாபுவை கைது செய்த போலீசார்,பலத்த பாதுகாப்புடன் விஜயவாடாவுக்கு அழைத்து சென்றனர்.
சந்திரபாபு நாயுடு கைது தொடர்பான தகவலை அறிந்த தெலுங்கு தேச கட்சியினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இன்று சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். சந்திரபாபுவை சந்திக்க வேண்டும் என நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் விஜயவாடா விரைந்தார். காவல்துறை அவரை தடுத்து நிறுத்தியதால் சாலை படுத்து மறியலில் ஈடுபட்டதால் நள்ளிரவில் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.







