மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் செய்வதற்கு பதிலாக எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவமதித்து வருகின்றன. குடியரசுத் தலைவர் உரையை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது கண்டனதுக்குரியது. அவர்கள் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களுக்குமாக பட்ஜெட் உள்ளதால் அதைப்பற்றி விவாதிப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகவில்லை. பட்ஜெட் அனைவருக்குமானதாகவும் வெளிப்படையாகவும் இருப்பதை பார்த்துவிட்டு அவர்களால் பேச இயலவில்லை. பட்ஜெட் குறித்து விவாதிப்பதற்கு பதிலாக அவர்கள் கூச்சலிட்டு கொண்டிருக்கின்றனர். எல்ஐசி மற்றும் எஸ்பிஐ நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது பற்றி அவர்களே விளக்கமளித்துவிட்டார்கள். எதிர்க்கட்சிகள் விவாதிப்பதற்கு பதிலாக ஏன் ஓடுகிறார்கள்?. இவ்வாறு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசினார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தொடர்ந்து இரண்டு நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கையை வைத்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், குடியரசுத் தலைவர் உரை தேர்தல் உரையாக இருந்தது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.







