காட்டுத்தீயைப் போல் கொரோனா வைரஸ் பரவுவதால், அதைத் தடுப்பதற்கான தடுப்பூசி விநியோகமும் காட்டுத்தீயைப் போல் இருக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் உலக நாடுகளை வலியுறுத்தி உள்ளார்.
ஐ.நா பொது அவையில் பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போரில், உலக நாடுகள் மிகத் தீவிரத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில், இந்த வைரசால், மனித உரிமைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். கொரோனாவுக்கு எதிராக அறிவியல் பூர்வமாக செயல்படும் அதேநேரத்தில், மக்களின் நிலைமையை உணர்ந்தும் அரசுகள் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் 150 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஆனால், அவற்றின் விநியோகம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு சமமற்று இருப்பதாகவும் ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் குறிப்பிட்டுள்ளார். வளர்ந்த நாடுகள் கொரோனா தடுப்பூசியின் விலையை 7 மடங்கு உயர்த்தி விற்பதால், ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா தடுப்பூசி 70 சதவீதம் முடிவடைவதற்கே இன்னும் 3 ஆண்டுகள் தேவைப்படும் என அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.








