ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓபன்ஹெய்மர் திரைப்படம் நேற்று வெளியானது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இந்த படம் அணு விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் ஓபன்ஹெய்மரின் பயோ பிக் படமாக உருவாகியுள்ளது. நேற்று முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் 90 கோடி வசூல் செய்துள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். மெமென்டோ, தி டார்க் நைட், இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டன்கிர்க், டெனெட் போன்ற படங்கள் மூலம் பிரபலமான அவர், தற்போது ‘ஓபன்ஹெய்மர்’ படத்தை இயக்கியுள்ளார். சினிமா ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஓபன்ஹெய்மர், நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
ஓபன்ஹெய்மர் ஆன்லைன் புக்கிங் தொடங்கிய ஒரே நாளில், இந்தியாவில் மட்டும் 3 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக சொல்லப்படுகிறது. முக்கியமாக ஐமேக்ஸ் திரையரங்குகளில் முதல் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் காலியாகிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. அமெரிக்க அணு விஞ்ஞானியான ராபர்ட் ஓபன்ஹெய்மரின் பயோ பிக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அணு குண்டு வெடித்து சிதறும் காட்சிகள் உட்பட அனைத்தும் கிராபிக்ஸாக இல்லாமல் ஒரிஜினலாகவே படமாக்கியுள்ளார் கிறிஸ்டோபர் நோலன்.
இதற்காகவே இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா – நாகசாகி மீது அணுகுண்டை வீசிய அமெரிக்க விஞ்ஞானி தான் ஓபன்ஹெய்மர். இதன் பின்னணியில் தான் மொத்த படமும் உருவாகியுள்ளது.
ஓபன்ஹெய்மர் படத்துக்கு முதல் நாளில் இருந்தே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், இந்தப் படம் இந்தியாவில் மட்டும் ரூ13.50 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 90 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரூ.90 கோடி வசூலில் பாதியளவு, அதாவது 45 முதல் 50 கோடி வரை அமெரிக்காவில் மட்டுமே கலெக்ஷன் ஆகியுள்ளதாம்.
மற்றொரு பக்கம் ஓபன்ஹெய்மர் படத்துடன் மோதிய இன்னொரு ஹாலிவுட் படமான பார்பியும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து வருகிறதாம். இந்தப் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓபன்ஹெய்மர், பார்பி என இந்த இரண்டு படங்களும் சேர்ந்து, நேற்று ஒரே நாளில் 200 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் கடந்த வாரம் வெளியான மிஷன் இம்பாசிபிள் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை ஓப்பன்ஹெமர் திரைப்படம் பின்னுக்கு தள்ளியிருக்கிறது.
ஒப்பன்ஹெமர் திரைப்படம் மிகவும் நன்றாக உள்ளதென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



![Oppenheimer - Bande annonce VOST [Au cinéma le 19 juillet 2023] - YouTube](https://i0.wp.com/i.ytimg.com/vi/i2DdcW8TNEo/maxresdefault.jpg?resize=790%2C444&ssl=1)






