நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும்
கசிவு ஏற்பட்டு வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்ததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் நிறுவனம் சார்பில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச்சூழல் மாசடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள், கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாகினர். உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட சிபிசிஎல் ஊழியர்கள் அடைப்பு சரி
செய்யப்பட்டதாக அறிவித்தனர். ஆனால் மறுநாள் மீண்டும் அதே இடத்தில் என்ன கசிவு
ஏற்பட்டது.
இதனையடுத்து சென்னையில் இருந்து வர வைக்கப்பட்ட குழுவினர் குழாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே கச்சா எண்ணெய் குழாயை நிரந்தரமாக அகற்றக்கோரி நாகூர், பட்டினச்சேரி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சந்தித்து
கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பைப் லைன் உடைப்பை சீரமைத்து விட்டதாகவும்,
மீனவர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறினார். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் மறு உத்தரவு வரும் வரை பைப் லைன்னில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணியில் சிபிசிஎல் நிர்வாகம் ஈடுபட கூடாது என பொது மேலாளர் இடம் கூறி
இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட அதே இடத்தில் கச்சா எண்ணெய் குழாயில் 3வது முறையாக கசிவு ஏற்பட்டது. குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில், இன்று பம்பிங் செய்ததால் வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்து கடலில் கலந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் கடற்கரையில் திரண்டுள்ளனர்.
இரண்டு முறை குழாய் உடைப்பு சரி செய்ததாக சிபிசிஎல் அறிவித்த நிலையில் இன்று மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை எடுத்து சம்பவ இடத்தில் சென்ற வட்டாட்சியர் ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கச்சா எண்ணெய் கசிவு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். வரும் 16ம் தேதி குழாய் அப்புறப்படுத்துவதற்கான குழு அமைத்து ஆய்வு செய்ய இருந்த நிலையில் இந்த எண்ணெய் கசிவு பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.







