முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு புகார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கைது…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

திமுக நிர்வாகியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதுபோலவே ராயபுரம் கல்மண்டபம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் 2வது முறையாக கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் அளித்த தொழிற்சாலை அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 25ம் தேதி காவல் துறையினர் மூன்றாவது முறையாக கைது செய்தனர். ஜெயக்குமார் அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மோசடி செய்திருப்பதாக திருவொற்றியூரில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது, அந்த புகார் விசாரணையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து காவலர்களுக்கு 4 மாதத்திற்கு 30 லட்சம் செலவில் ஆவின் மோர் வழங்கப்படும். காலை 2500 பாக்கெட்டுகள், மாலை 2500 பாக்கெட்டுகள் வீதம் நாள் ஒன்றுக்கு 5000 மோர் பாக்கெட்டுகள் வழங்க திட்டம் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.