பழனி பெரியாவுடையார் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு, 108 வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு யாகபூஜை நடைபெற்றது.
பழனி சண்முக நதிக்கரையில், மேற்கு நோக்கி அமைந்துள்ள சுயம்புலிங்க தலம் பெரியாவுடையார் கோயில். இக்கோயிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. காலையில் விநாயகர் அனுமதி, சங்கல்பம், புண்ணியாகவாசம் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பிரதான கலசங்கள் வைத்து 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பட்டு, தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவ ஆவாகனம் நடைபெற்றது.
பின்னர், யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டு வேதபாராயணம் செய்யப்பட்டது.
யாககுண்டத்தில் மூலிகைப்பொருட்கள் இடப்பட்டு மூலமந்திரங்கள் கூறினர்.
இந்த பூஜைகளை தலைமை குருக்கள் அமிர்தலிங்கம், ஸ்தானீகர் செல்வசுப்ரமணிய
சிவாச்சார்யார் உள்ளிட்டோர் செய்தனர். தொடர்ந்து, பூர்ணாஹூதி நடைபெற்று
தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர், புனித கலசங்கள் கோயிலை சுற்றி வலம் வந்து மூலவர் பெரியாவுடையாருக்கு
அபிஷேகம் செய்யப்பட்டது. கலச பூஜையைத் தொடர்ந்து சோடஷ அபிஷேகம்,
சோடஷ உபச்சாரம் நடைபெற்றது. உச்சிக்காலத்தின் போது மூலவருக்கு வெள்ளி
நாகாபரணம் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவிற்கான
ஏற்பாடுகளை சித்தனாதன் சன்ஸ் செய்திருந்தனர்.
—கு. பாலமுருகன்







