”பாஜகவினரை சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது திமுக அரசு”- கே.பி.ராமலிங்கம் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டதற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவினரை சீண்டிவிட்டு திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமது டிவிட்டர்…

தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டதற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவினரை சீண்டிவிட்டு திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், அரசு அதிகாரிகள் கொடுத்த அனுமதியின் அடிப்படையில் தருமபுரியில் உள்ள பாரத மாதாவின் கோவிலில் உள்ள பாரத அன்னையின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவதற்காக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்  இன்று சென்றதாக கூறியுள்ளார்.

ஆனால், அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள் எவருமே அங்கு வராமல் கோவிலின் கதவைப் பூட்டி வைத்திருந்தார்கள் என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, வெகு நேரம் காத்திருந்த பின்னரும் அரசு அதிகாரிகள் வராததால் பாஜக தொண்டர்களுடன்  கே.பி.ராமலிங்கம் பாரத அன்னைக்கு மரியாதை செலுத்தக் கோவிலின் வெளிக்கதவைச் சேதப்படுத்தாதவாறு உள்ளே சென்றதாகக் கூறியுள்ளார்.

அனுமதி கொடுத்த அரசு அதிகாரிகள் ஏன் வரவில்லை என்பது இந்த திமுக அரசுக்கே வெளிச்சம், எனக் கூறியுள்ள அண்ணாமலை,  கே.பி.ராமலிங்கம்  கைதை பாஜக வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார்.

அவரை உடனடியாக எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அலட்சியப் போக்குடனும், அராஜக போக்குடனும் பாஜக தொண்டர்களைச் சீண்டி விட்டு, தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதை திமுக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளதாக தமது டிவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.