அண்ணாமலை குற்றச்சாட்டு; ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்!

ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து ஜி…

ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து ஜி ஸ்கொயர் நிறுவனம் 29 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு சில தனிநபர்கள் வெறுப்பு பிரசாரத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகே தங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டுவதாகவும், ஊழல்களில் ஈடுபடுவதாகவும் வதந்தி பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வரும் முன்பே தங்கள் நிறுவனம் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும்,
முறையான தணிக்கை செய்து சட்டரீதியாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டு செயப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த 14ம் தேதி அண்ணாமலை வெளியிட்ட ஆவணத் தொகுப்பில் ஜி ஸ்கொயர் குறித்து குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவதூறு பரப்பும் வகையில் கூறப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதராமற்ற குற்றச்சாட்டுகள், கடினமாக உழைத்து ஈட்டிய பணம் மூலமும், வங்கிகளில் கடன் பெற்று நிலம் வாங்கிய வாடிக்கையாளர்களை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ தங்கள் நிறுவனம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேசிய கட்சியில் பொறுப்புமிக்க பதவியில் உள்ள ஒரு நபர் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும், கட்டுமான நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறித்து தாங்கள் குறிப்பிட்டுள்ள தொகை முற்றிலும் தவறானது எனவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.