சென்னை அண்ணா நகர், பாடிகுப்பம் சாலை பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மழை நின்ற பின்னரும் கூட வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழில் இன்று தொடர் நேரலையை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா நகர், பாடிகுப்பம் சாலை பகுதி பொதுமக்கள் கூறுகையில், “தொடர் மழை காரணமாக 6 நாட்களாக குடியிருப்பில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். மின்சாரம், உணவு என எதுவும் இன்றி இருப்பதை கொண்டு பிழைத்துக்கொண்டோம். வெள்ள நீரை அப்புறப்படுத்த அரசு தரப்பில் அவர்களால் முடிந்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. 2 ஐஏஎஸ் அதிகாரிகள் இப்பணியை தொடர்ந்து மேற்காணல் செய்தனர்.
நாங்கள் குடியிருக்கும் தமிழ்நாடு வீட்டு வசிதி வாரிய குடியிருப்பில் மழைநீர் வடிகால் இல்லை. இந்த பிரச்னை கடந்த 25 ஆண்டுக்கால கோரிக்கை. இதனை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைக்கிறோம்.” என பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.








