நாடு முழுவதுமே ராவணனனுக்கு வெறும் 5 கோயில்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 5 தலைக் கொண்ட ராவணன் சிலை சென்னையில் மீட்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளி சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
“சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திற்கு அருகில் உள்ள Ideal Beach Resortல் அமைந்துள்ள Indian Cottage Industries என்ற நிறுவனத்தில், தமிழ் நாட்டில் உள்ள மிகவும் பழமையான இந்துக் கோயில்களில் இருந்து களவாடப்பட்டு கொண்டு வரப்பட்ட தொன்மையான உலோகச் சிலையை, சட்டத்திற்குப் புறம்பாக வெளி நாடுகளுக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றது.
இதன் அடிப்படையில் சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில், சிலை திருட்டுத் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் பொன்னி மேற்பார்வையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்நடராஜன் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜா காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் காவல் ஆய்வாளர் தமிழ் செல்வி, மற்றும் போலீஸ் பார்டியினர் மேற்கண்ட முகவரிக்கு கடந்த 24.12.2021 ஆம் தேதி சென்று அந்தக் கடையின் உரிமையாளர் ஜாவித் ஷா என்பவரை விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தனது கடையில் இருந்த மிகவும் தொன்மையான 11 உலோகச் சிலைகளை எடுத்து ஆஜர்படுத்தினார். மேலும் அந்த சிலைகள் அவருக்கு எப்படி கிடைத்தது என்ற விவரமும் ASI நிறுவனத்தாரால் Suspected to be an antiquity என்று சான்று வழங்கப்பட்ட ஐந்து சிலைகளுக்கான படிவமும் அவரிடம் இருந்தது.
இந்த சிலைகளை ஜாவித்ஷா சட்டத்திற்கு புரம்பாக விற்பனை செய்து விட்டதாக தெரிய வந்ததால் அன்றைய தினமே மேற்கண்ட 11 உலோகச் சிலைகளையும் நான்கு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.
பின்னர் புலன் விசாரணையின் தொடர்ச்சியாக 10.01.2022ஆம் தேதி ஜாவித் ஷா, நின்ற நிலையில் இருந்த தொன்மையான பார்வதி உலோகச் சிலையை ஒப்படைத்தார். அவர் இன்னும் 4 தொன்மையான உலோகச் சிலைகளை ஒப்படைக்கவில்லை. எனவே, ஜாவித் ஷா இன்று கைது செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.” என்று கூறினார்.
மேலும் மேற்படி கைப்பற்றப்பட்ட சிலைகள் எந்தெந்த கோயில்களில் திருடப்பட்டது என்பது குறித்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
அதேபோல, மீட்கப்பட்ட 11 சிலைகளில் 8 சிலைகள் தொன்மையானது என்றும், இதன் மதிப்பு 30லிருந்து 40 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட சிலைகளில் 11ஆம் நூற்றாண்டு சிலைகளும் உள்ளது என்றும், நாடு முழுவதுமே வெறும் 5 ராணவன கோயில்கள் மட்டுமே உள்ள நிலையில் இராவணன் பத்து தலை உள்ள சிலை மிகவும் மதிப்பு மிக்கது என்றும் ஏடிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்.








