இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்த விழா மும்பையில் அம்பானியின் அண்டிலியா வீட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டனர்.
ஆனந்த் அம்பானி என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்டின் மகளான ராதிகா மெர்ச்சென்ட் என்பவரை விரைவில் மணக்கவுள்ளார். ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்ச்ன்ட் ஆகிய இருவரும் நேற்றைய நிகழ்ச்சியில் மோதிரம் மாற்றி நிச்சயித்து கொண்டனர்.
இந்த நிச்சயதாரத்த நிகழ்ச்சி குஜராத்தைச் சேர்ந்த இந்துக்கள் கடைபிடிக்கப்படும் கோல் தானா மற்றும் சுனரி விதி போன்ற சடங்குகளுடன் நடைபெற்றது. திருமனத்துக்கு முந்தைய கோல் தானா சடங்கில் வெல்லம் மற்றும் கொத்தமல்லி விதைகள் பறிமாறி கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து சுனரி விதி சடங்கு நடந்தது.
அமெரிக்காவில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் எரிசக்தி நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தவர். தற்போது என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.







