தேசிய பங்குசந்தை முறைகேடு: ஆனந்த் சுப்பிரமணியன் கைது

தேசிய பங்குசந்தை முறைகேடு தொடர்பாக முன்னாள் NSE-ன் நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியனை சென்னையில் சிபிஐ கைது செய்தது. கடந்த 2013-2016 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக…

தேசிய பங்குசந்தை முறைகேடு தொடர்பாக முன்னாள் NSE-ன் நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியனை சென்னையில் சிபிஐ கைது செய்தது.

கடந்த 2013-2016 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் அங்கு பணியாற்றியபோது நிர்வாக ரகசியத் தகவல்களையும் அங்கு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளையும் இமய மலையில் இருக்கும் ஒரு முகம் தெரியாத சாமியாரிடம் பகிர்ந்ததாகவும், அவரது ஆலோசனையில் பங்கு சந்தை செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சித்ராவின் இந்த முறைகேடுக்கு அவரது ஆலோசகாரான ஆனந்த் சுப்பிரமணியன் மற்றும் ரவி நரேனும் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் இவர்களது குற்றத்திற்காக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ரூ.25 லட்சம் மற்றும் ரவி நரேனுக்கு ரூ.20 லட்சம் அபராதமும் விதித்தது.

2018ம் ஆண்டிலிருந்து விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கு தற்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் சுற்றறிக்கையை சிபிஐ விடுத்துள்ளது. மேலும் மூவரிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து தனியார் நிறுவனம் ஒன்று NSE-இன் தரவுத்தளத்திலும் பரிமாற்றத்தின் சர்வரில் உள்நுழையவும் NSE அதிகாரிகள் சிலர் மூலம் நியாயமற்ற முறையில் அணுகியதாகவும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சூழலில் சமீபத்தில் சிபிஐ, சித்ரா ராமகிருஷ்ணாவிடம் 12 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது, ஆனந்த் சுப்பிரமணியனை சென்னையில் அவரது வீட்டில் வைத்து சிபிஐ கைது செய்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் இவரிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.