ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம்: பிரபலங்களின் வருகையால் களைகட்டத் தொடங்கிய மும்பை!

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்டின் திருமணம் மும்பையில் இன்று நடைபெறும் நிலையில், மும்பையே களைகட்டத் தொடங்கியுள்ளது. விழாவில் கலந்துகொள்ள வந்த பல்வேறு நாடுகளின் பிரபலங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரபல தொழிலதிபரான முகேஷ்…

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்டின் திருமணம் மும்பையில் இன்று நடைபெறும் நிலையில், மும்பையே களைகட்டத் தொடங்கியுள்ளது. விழாவில் கலந்துகொள்ள வந்த பல்வேறு நாடுகளின் பிரபலங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி தன்னுடைய இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு பிரமாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்து திருமணத்தை நடத்தி வைக்கிறார். ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிர்க்கும் இன்று (ஜூலை 12) மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது.

இவர்களுடைய திருமணம் இன்று தான் என்றாலும், கடந்த ஒரு மாத காலமாக இவர்களுடைய திருமண நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக உலகையே வியந்து பார்க்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. உலக பிரபலமான ரிஹானா மற்றும் ஜஸ்டின் பீபர் போன்றவர்களை அழைத்து திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் இசை கச்சேரிகள் நடத்தப்பட்டன.

இவர்கள் வருவதற்கு சம்பளமாக பல கோடிகளை கொடுத்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தின. அதேபோல, அம்பானி குடும்பத்தினர் அணிந்திருக்கும் வாட்ச் மற்றும் உடைகள் ஆகியவற்றின் விலை குறித்தும் தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனந்த் – ராதிகா திருமண விருந்தில், திரைத்துறையில்  இருந்து பல முன்னணி நடிகர்களும், வெளிநாட்டு பிரதிநிதிகளும் மற்றும் பெரும் தொழிலதிபர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

அதன்படி, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர், முன்னாள் ஸ்வீடன் பிரதமர் கார்ல் பில்ட், கனடாவின் முன்னாள் பிரதமர், தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் உள்ளிட்டோர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி கால்பந்து சங்கத்தின் (FIFA) தலைவரான கியானி இன்ஃபான்டினோ, சமூக வலைதள தொழில்முனைவோரான ஜே ஷெட்டி மற்றும் ஸ்டீபன் ஹார்பர், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜே லீ, லாக்ஹீட் மார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் டெய்க்லெட், எச்எஸ்பிசி குழுமத் தலைவர் மார்க் டக்கர் ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்க உள்ளனர்.

தொழில் அதிபர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் தவிர, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதற்கான விருந்தினர் பட்டியலில் கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன், மைக் டைசன், ஜான் சீனா, டேவிட் பெக்காம் மற்றும் அடீல் ஆகியோர் அடங்குவர். மேலும் சல்மான் கான், ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் மற்றும் ராம் சரண் போன்ற பிரபலங்கள் திருமணத்திற்காக ஏற்கனவே மும்பை வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஜான் சீனா இந்தியா வந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடியும் நிலையில், அடுத்ததாக நாளை (ஜூலை 13) ‘மங்கள் உத்சவ் விழா’ மற்றும் ஜூலை 14 அவர்களின் திருமண வரவேற்பு விழாவும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.