அரியலூர் மாவட்டம் தத்தூர் அருகே சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாயி, வயது 60. இவர் தனக்கு சொந்தமான 4 கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு நேற்று காலை ஓட்டி சென்றுள்ளார். மாடுகளை மேய்த்துக் கொண்டு மாலை வழக்கம்போல் வீடு திரும்புபவர், நேற்று மாலை வீட்டுக்கு வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், வழக்கமாக மாடு மேய்க்கும் பகுதிகளுக்கு சென்று தேடி பார்த்தபோது, அங்கு மருதாயி மற்றும் மூன்று மாடுகளும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது எதனால் நடந்தது என்று அக்கம் பக்கத்தில் பார்த்த பொழுது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டி உடல் மற்றும் மூன்று மாடுகளையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்த போது இரண்டு நாட்களாக அப்பகுதிகளில் காற்று உடன் கூடிய மழை பெய்ததால் காற்றில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதனை கவனிக்காமல் சென்ற பொழுது மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிய வந்தது.
தொடர்ந்து இதுகுறித்து தத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.








