தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 150 எம்.பி.பி.எஸ் இடங்கள்…!

தேசிய மருத்துவ ஆணையமானது தமிழ் நாட்டில் நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக எம்.பி.பி.எஸ் இடங்களை ஒதுக்கியுள்ளது.

மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம் (MARB) நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்கனவே உள்ள மருத்துவ இடங்களுடன் தலா 50 இளங்கலை (MBBS) மருத்துவ இடங்களை கூடுதலாக வழங்கியுள்ளது. அதன்படி இந்த மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைத் திறன் தலா 100-லிருந்து 150 இடங்களாக உயர்ந்துள்ளன.

மாநில சுகாதாரத்துறையின் தீவிர உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விதிமுறை இணக்க அறிக்கைகள் ஆகியவற்றின் மூலம், தமிழ்நாடு அரசு இதுவரை மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,200 இடங்களாக வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது.

மருத்துவ உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான நமது தொடர்ச்சியான முயற்சிகளை இந்த விரிவாக்கம் பிரதிபலிக்கிறது. நாட்டின் முதன்மை சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி மையமாக நமது மாநிலத்தின் நிலையைத் தக்கவைத்துக்கொள்வதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

நடப்பு 2026-27 கல்வியாண்டில் வரவிருக்கும் மாநில கலந்தாய்வு செயல்முறையில் இந்த 150 கூடுதல் இடங்களை சுமூகமாக ஒருங்கிணைக்க மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு (DME &R) அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையானது இறுதி செய்யப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய (NMC) இட ஒதுக்கீட்டுப் பட்டியலை (seat matrix) கண்டிப்பாகப் பின்பற்றி நடைபெறும் என மாண்புமிகு மருத்துவம். மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மரு.கோ.க.அருண்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.