கேரளாவில் அமீபா நோய் : சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் பயப்பட வேண்டாம் – தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கேரளாவில் மூளையை திண்ணும் அமீபா நோய் பரவி வரும் நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறையானது தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கேரளாவின் ஆறுகள், நீரோடைகள் குளங்களிலிருந்து பரவி மூளையை தின்னும் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழக பொது சுகாதாரத்துறையானது தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அளித்துள்ளது.

அதில், சபரிமலைக்குச் செல்பவர்கள் எந்த ஒரு அச்சப்படவும் தேவையில்லை கொரோனா தொற்று போல இந்த நோய் பரவாது. சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஏற்கெனவே ஏதேனும் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களாக இருந்தால் அதற்கான மருத்துவ ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிப்பது அவசியம். சபரிமலை யாத்திரைக்கு புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொதிக்கவைத்த நீரையே குடிக்க வேண்டும். மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும். சபரிமலை வரும் வழியில் ஆறுகளில் குளிக்கும் போது மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைசுற்றல், உடல் வலி, வாந்தி, மயக்கம், சுவை மாற்றம்,பின்கழுத்துப் பகுதி இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.