பாஜக கூட்டணியில் இணைந்த அமமுக – ‘எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான்’ … டிடிவி தினகரன்!

மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் அதிமுக – பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னயில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது,

“அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுக இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டு கட்சி மற்றும் தமிழ்நாட்டு நலனை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான்.

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற வள்ளுவரின் வாக்குப்படி கூட்டணியை முடிவு செய்துள்ளோம். மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். தமிழ்நாட்டில் நல்லாட்சி அமைய உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ்கோயலை டிடிவி தினகரன் நேரில் சந்தித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.