தெள்ளு தமிழ் வசனங்களில் பகுத்தறிவு கருத்துகளை குறிப்பிட்டு சீரார்ந்த உரையாடல்களை எழுதுவதில் கருணாநிதி வல்லவர் என்றால் ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவர் ஜெயலலிதா. மெட்ரிகுலேஷன் படிக்கும்போதே மாநில அளவில் ஆங்கிலத்தில் சிறந்த மாணவியாக தேர்வு பெற்றவர். பிளமிங்கோ என்ற நடனம் குறித்து செய்தி வெளியான நிலையில் பிளமிங்கோ பறவையை குறிப்பிட்டு செய்தி வெளியானது. இதனை அறிந்த ஜெயலலிதா பிளமிங்கோ என்பது பறவை அல்ல என்றும் அது ஒரு வகை நடனம் என்றும் சுட்டிக்காட்டினார்.
பெங்களூரில் படித்தபோது தீபாவளிக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே விடுமுறை அளித்ததற்காக பள்ளி நிர்வாகத்திற்கு பாடம் கற்பிக்க எண்ணிய ஜெயலலிதாவும் அவரின் தோழிகளும் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் தூங்கியதைக் கண்டதும் பட்டாசை கொளுத்தி விட பதறியபடி ஓட முயன்ற அந்த ஆசிரியர் தடுமாறி கீழே விழுந்தார். இதற்காக ஜெயலலிதாவுக்கு கிடைத்தது பிரம்படி என்றும் செவி வழி செய்திகள் தெரிவிக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளிக்காலத்தில் ஆங்கிலத்திலும் வரலாற்றிலும் சிறந்த மாணவியாக விளங்கிய ஜெயலலிதா கல்லூரி ஆங்கில விரிவுரையாளராக விரும்பினார். ஆனால் விதி அவரை திரையுலகுக்கு அழைத்து வந்துவிட்டது. பள்ளி நாட்களில் நாட்டியம் பயின்ற ஜெயலலிதா 8 வயதில் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. அரங்கேற்றத்திற்கு தலைமை தாங்கியவர் நடிகர் சிவாஜி கணேசன்.
எம்ஜிஆர் நடிப்பில் ஏவிஎம் தயாரித்த ஒரே திரைப்படமான அன்பே வா திரைப்படத்தில் முதலில் நடிக்க கதாநாயகியாக ஒப்பந்தமானவர் ஜெயலலிதா. ஆனால் முன்னணி நடிகையாகி விட்ட நிலையில் கால்ஷீட் தேதி ஒத்து வராத காரணத்தால் ஜெயலலிதா நடிக்க முடியாமல் போனது. அவருக்கு பதிலாக சரோஜாதேவி நடித்தார்.
ஒய்.ஜி பார்த்தசாரதியின் நாடக குழுவில் நடிகர் சோவுடன் பல ஆங்கில நாடகங்கள் நடித்த ஜெயலலிதாவின் நடிப்பையும் ஆங்கில புலமையும் கண்டு ஆங்கிலத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. பெரும் வெற்றி பெற்ற சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படத்தின் நூறாவது நாள் விழாவை காண தாயார் சந்தியா உடன் சென்ற ஜெயலலிதாவை கண்ட இயக்குநர் பி ஆர் பந்துலு கன்னட படத்தில் நடிக்க வைத்தார்.
கன்னட படத்தின் காட்சிகளை இயக்குநர் ஸ்ரீதர் காண நேர்ந்தது. தனது புதிய திரைப்படமான வெண்ணிற ஆடைக்கு இளமையான துறுதுறுப்பான நடிகை தேவை என செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருந்த நிலையில் ஜெயலலிதாவை கண்டதும் தாயார் சந்தியாவை அணுகி அனுமதி பெற்றார் ஸ்ரீதர். வெண்ணிற ஆடையில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார் ஜெயலலிதா. கன்னட படத்தில் அறிமுகம் செய்த பி.ஆர்.பந்துலு தமிழில் எம்ஜிஆர் நடிக்க, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை இயக்க தயாராகி வந்தார்.
பிறகென்ன ஜெயலலிதாவின் வாழ்க்கையே மாறிப்போனது. படப்பிடிப்பின்போது யாருடனும் அரட்டை அடிக்காமல், புறம் பேசாமல், ஓய்வு கிடைத்தால் ஆங்கில நாவலை படிக்க ஒதுங்கி விடுவது என சிறப்பான குணங்களைப் பெற்றிருந்த ஜெயலலிதா மீது எம்ஜிஆருக்கு மதிப்பு அதிகரித்தது. தொடர்ந்து தனது படங்களில் நடிக்க ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் வாய்ப்பு வழங்க, அவருடன் அதிக படங்களில் இணைந்து நடித்த நடிகையானார் ஜெயலலிதா.
எம்ஜிஆரை வைத்து திரைப்படம் தயாரிக்க எண்ணிய நடிகர் சந்திரபாபு அட்வான்ஸ் தொகையும் கொடுத்திருந்தார். கால்ஷீட் விவகாரங்களை தனது சகோதரர் சக்கரபாணியிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படி எம்ஜிஆர் கூற சக்கரபாணியை சந்திக்க சென்றார் சந்திரபாபு.அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனால் எம்ஜிஆர் சந்திரபாபுவின் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.தனது படங்களில் நடிக்க சந்திரபாபுவுக்கு வாய்ப்பளிக்கவும் எம்ஜிஆர் விரும்பவில்லை.
இந்த பிரச்சனை நடைபெற்ற சில ஆண்டுகளுக்கு பின்னர் அடிமைப்பெண் திரைப்படத்தை தயாரித்தார் எம்ஜிஆர். இதில் மந்திரவாதி வேஷத்தில் சந்திரபாபு நடித்திருப்பார் . எம்ஜிஆர் படத்தில் தனக்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என சந்திரபாபு சந்தேக பாபுவாக மாற அவருக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. சந்திரபாபு மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக ஜெயலலிதா எம்ஜிஆரிடம் கூற, இதனை தொடர்ந்து தான் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு வழங்கினார் எம்ஜிஆர்.தாயார் சந்தியாவின் மரணம் ஜெயலலிதாவை வெகுவாக பாதித்துவிட தமிழ் திரையுலகில் இருந்து விலகிய ஜெயலலிதா ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்குப்பின் சென்னைக்கு திரும்பி சில திரைப்படங்களில் நடித்தார். அவ்வாறு அவர் நடித்ததில் நதியை தேடி வந்த கடல் என்ற திரைப்படம் தான் கடைசி படமாக அமைந்தது. 127 படங்களில் நடித்த ஜெயலலிதாவின் 30க்கும் மேற்பட்ட படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடின.