பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3வது டெஸ்ட் இந்தூரில் மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக கம்மின்ஸ் செயல்பட்டு வந்தார்.
2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியுற்றதால்தான் கம்மின்ஸ் நாடு திரும்பினார் என்று அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டனய. ஆனால், இதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நிர்வாகம், கம்மின்ஸ் சொந்த விஷயம் காரணமாக நாடு திரும்பியுள்ளார். 3வது போட்டியில் கலந்துகொள்வார் என தெரிவித்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் , 3வது போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா திரும்புவார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 3வது டெஸ்டில் கம்மின்ஸ் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கம்மின்ஸ் கூறியுள்ளதாவது: எனது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதால் இந்த நேரத்தில் இந்தியாவுக்குத் திரும்புவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். தொடர்ந்து எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்த ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கம்மின்ஸ் கேப்டனான பிறகு ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இரண்டு முறை செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்மின்ஸ் மூன்றாவது டெஸ்டுக்குப் பிறகும் இந்தியாவுக்குத் திரும்பவில்லை எனில் 4வது டெஸ்டிலும் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என கருதப்படுகிறது.
-ம.பவித்ரா








