நாடு முழுவதும் அடுத்தமுறை மின்னணு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பிறப்பு, இறப்பு பதிவேடும் இணைக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் உள்ள அமிங்கானில் என்ற பகுதியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டடத்தை மத்திய உள்துறை அமித் ஷா இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அடுத்த முறை மின்னணு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், இதன் மூலம் துல்லியமான தரவுகளை சேகரிக்க முடியும் என்றும் அறிவித்தார்.
இது அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிப்படையை வழங்கும் என கூறிய அவர், நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 100 சதவீதம் துல்லியமான கணக்கீடுகளை எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார்.
‘அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, கணிணி முறையில் நடத்தப்படுவதாகவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பல வழிகளில் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். மக்கள்தொகை அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் கொண்ட அஸ்ஸாம் போன்ற மாநிலத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பிறப்பு, இறப்பு பதிவேடுகளும் இணைக்கப்படும் என்ற அவர், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை தாமதமானது என விளக்கமளித்தார்.
Advertisement: