நடிகர் சூர்யா நடித்த “சூரரைப் போற்று” Amazon Prime -ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தை Amazon Prime ஓடிடி தளத்தில், முதல் முறையாக அந்நிறுவனமே இந்தியில் டப்பிங் செய்து அதை வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிடுகிறது.
சூர்யா நடிப்பில், மிக பிரமாண்ட தயாரிப்பாக 2020ஆம் ஆண்டு Amazon Prime-ல் வெளியான திரைப்படம் “சூரரைப் போற்று”. நட்சத்திர அந்தஸ்து கொண்ட, பிரபல முன்னணி நடிகர் நடிப்பில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான முதல் படமாக இப்படம் கருதப்படுகிறது.

இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா, மாறுபட்ட நடிப்பில், இந்திய விமானதுறையில் சாதனை படைத்த கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான படம்தான் “சூரரைப் போற்று”. கதை சொல்லல், காட்சியமைப்பு, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என அனைத்து துறைகளிலும் பிரமாதப்படுத்தியிருந்தது. எதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார் சூர்யா. விமர்சகர்களிடமும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஓடிடியில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தென்னிந்திய திரைப்படமாக இந்த திரைப்படம் சாதனை படைத்தது.
Amazon Prime-ல் வெளியான இப்படம் உலக அளவில் பார்வையாளர்களை ஈர்த்து, பல திரைவிழாக்களிலும் பங்கு கொண்டது. உலக அளவில் மதிக்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இப்படம் இடம்பிடித்தது.
தென்னிந்தியாவிலும் உலக அளவிலும் கிடைத்த வரவேற்பினை அடுத்து, Amazon Prime நிறுவனம் இப்படத்தினை இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து, வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தனது தளத்தில் வெளியிடுகிறது. Amazon Prime தளத்தில் முதல் முறையாக ஒரு தமிழ் படம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியாவது இதுவே முதல் முறையாகும்.







