உரிய உரிமமின்றி மருந்துகளை விற்பனை செய்த அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மருந்துப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களின் உரிமத்தைப் பெறுவது அவசியம். அந்த விதிமுறைகள் படியே மருந்துகளை விற்பனை செய்வது, விநியோகிப்பது, இருப்பு வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். அந்த வகையில், விதிகளை மீறி ஆன்லைனில் மருந்துப் பொருள்களை விற்பனை செய்ததாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஹெல்த் ப்ளஸ் உள்ளிட்ட 20 ஆன்லைன் நிறுவனங்களுக்கு டிசிஜிஐ சார்பில் (இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து, டிசிஜிஐ வி.ஜி.சோமானி அனுப்பியுள்ள நோட்டீஸில், உரிய உரிமம் இல்லாமல் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் டிசம்பர் 12, 2018 தேதியிட்ட டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு இந்த நோட்டீஸில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து இரண்டு நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறி மருந்துகளை விற்பனை செய்தல், விநியோகித்தல், இருப்பு வைத்தல் உள்ளிட்டவைக்கு எதிராக நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டம் 1940, அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பின்பற்றவில்லை.
மருந்துப் பொருள்களை விற்பனை செய்தல், விநியோகித்தல், இருப்பு வைத்தல் போன்ற பணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உரிமம் கட்டாயம். அதில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை உரிமதாரர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டஸுக்கு உரிய பதில் அளிக்காவிட்டால், இப்பிரச்னை குறித்து நிறுவனம் எதுவும் சொல்ல முடியாது என எடுத்துக் கொள்ளப்படும். மேலும், அவர்கள் மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா









