அமர் சேவா சங்கத்தின் 40வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அளிக்க உதவும் டிஜிட்டல் மறுவாழ்வு தளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் சமக்ர சிசஷா கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்வி இயக்கம், அமர் சேவா சங்கத்துடன் இணைந்து டிஜிட்டல் மறுவாழ்வு தளமான எனேப்ளிங் இன்க்ளுஷன் வழியாக அனைவரையும் உள்ளடக்கிய கல்விக்கான மாநிலத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. மேலும் அமர்சேவா சங்கத்தின் 40 ஆவது ஆண்டு நினைவு மலர் வெளியீடு மற்றும் அதன் வாழ்நாள் ஆதரவாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமர் சேவா சங்கத்தின் மூலம் லட்சத்தில் கோடியில் ஒருவராக சோதனையை சாதனையாக மாற்றி காண்பித்துள்ளார். ஏராளமான மாற்று திறனாளி மறுவாழ்வு பெற்று வருகின்றனர். 3 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு தரமான கல்வி, பெண் கல்வி, உடற்கல்வி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்த அமர் சேவா சங்கத்துடன் இணைந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
900 கிராமங்களில் கிராமம் சார்ந்த மறுவாழ்வு திட்டங்களை அமர் சேவா சங்கம் செயல் படுத்தி வருகிறது. அமர் சேவா சங்கத்திற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு நிச்சயம் மேற்கொள்ளும். பொறுப்புள்ள குடிமக்களாக குழந்தைகளை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமூக சமுதாய நலனில் அரசாக செயல்பட்டு வருகிறது என கூறினார்.







