தமிழக மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன் சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் பாபநாசம் ரயில்…

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன் சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. கொரோனா பரவலுக்கு பின் இயக்கப்பட்ட இந்த விரைவு ரயில் பாபநாசத்தில் நிறுத்தப்படாமல் சென்று வந்தது. இந்நிலையில் இன்று முதல் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ரயிலும், சென்னையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயிலும் பாபநாசத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்தது.

இன்று இரவு சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற விரைவு ரயில் பாபநாசத்தில் நின்று சென்றது. அதனை பச்சைக்கொடி அசைத்து மத்திய இணை அமைச்சர் முருகன் வழி அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிட பேசிய மத்திய இணை அமைச்சர் முருகன், ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு 126 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் கடல்பாசி வளர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளது. இது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என முருகன் தெரிவித்தார்.


கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முருகன் தெரிவித்தார். இதில் திருவெற்றியூர் பகுதியில் புதிதாக மீன்பிடி துறைமுகம் 150 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும், இதில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைப் போல் செங்கல்பட்டிற்கும் – விழுப்புரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் 250 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்க முடிவு செய்திருப்பதாகவும், சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.