திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது வழங்கியுள்ளனர்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை பட்ஜெட் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து 14ம் தேதி சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், பனை தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 3வது நாள் அமர்வு இன்று காலை தொடங்கியது. இதில், திண்டிவனம் ராமமூர்த்தி, அய்யாறு வாண்டையார் உள்ளிட்ட மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 9 பேருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. மேலும், ஸ்டேன் சுவாமி, வே.ஆனைமுத்து, ஆதீனம், மருத்துவர் காமேஸ்வரன், தமிழறிஞர் இளங்குமரனார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, திமுக அளித்த வாக்குறுதிகள் நிலை குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிய நிலையில், அவற்றிற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் தான் ஆகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றார்.
சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம், சொல்லாதையும் செய்வோம் அதுதான் திமுக அரசு என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார். இல்லத்தரசிகள் அனைவரும் ஆயிரம் வழங்கும் திட்டம் ஏழையானவர்களுக்கு மட்டுமல்ல, தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும், யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என உறுதியளித்தார்







