தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பார் உரிமத்தை நீட்டிக்கக் கோரிய வழக்கில் நீதிபதி சி. சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா காலங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. எனவே பார்களும் செயல்படாமல் இருந்தன. பார்கள் செயல்படாததால் உரிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறி பார்களின் உரிமத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிமன்ற நீதிபதி சி. சரவணன் விசாரித்து வந்தார். இந்த நிலையில் இன்றைய விசாரணையின் போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் இன்னும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று டாஸ்டாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் மதுபான கடைகளை ஒட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்தத் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் அனுமதிக்கவில்லை. டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்களை நடத்த இந்த சட்டம் அனுமதிக்கவில்லை என்றும், டாஸ்மாக் கடைகளுக்கு இடத்தைக் குத்தகைக்கு வழங்குபவர்கள், அருகில் உள்ள இடத்தை மேம்படுத்திப் பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்று நீதிபதி கூறியுள்ளார்.







