மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்து வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்தனர். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
இதனால் மணிப்பூா் முழுவதும் ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மைதேயி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் காங்போபி மாவட்டத்திலும் அவ்வப்போது துப்பாக்கி சூடு நடைபெறுவதும், கலவரங்கள் நடப்பதுமாக தொடர்கிறது. மணிப்பூர் முழுவதும் கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் இணையச் சேவைக்கு தடை தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த கலவரத்தை தொடா்ந்து நிகழும் வன்முறைகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த கலவரம் தொடர்பாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பத்து கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதின. இதனை தொடர்ந்து மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க, ஜூன் 24-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது, ”மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட முதல் நடவடிக்கை இந்த அனைத்து கட்சிக் கூட்டம். ஆனால், இது மிகவும் குறைவான, தாமதமான நடவடிக்கை. இதுபோன்ற தீவிரமான விஷயத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளாதது அவரது மக்களின் நம்பிக்கையை இழக்கச்செய்கிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் உள்துறை அமைச்சராக வந்த பின்னர் நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளது. மணிப்பூரில் பாகுபாடான மாநில அரசு தொடர்வதும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தாததும் வருத்தமளிக்கிறது’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







