குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை INDIA கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள், மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இன்று சந்தித்து மணிப்பூர் விவகாரம் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் மூன்று மாதங்களை எட்டவுள்ள நிலையில், இதுவரை கலவரத்தை கட்டுப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. கலவரத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு நிவாரண முகாம் தங்க வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் சந்தித்தார்.
இதற்கிடையே, மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க கோரி, நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து, இந்தியா கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 21 எம்.பி.க்கள் குழு கடந்த வாரம் மணிப்பூர் பயணம் மேற்கொண்டு நிவாரண முகாம்களில் மக்களை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், மணிப்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மாத கணக்காக வன்முறை நடக்கிறது, ஒரு FIR கூட பதிய முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு முடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுளார்.
இப்படி அனைத்து தரப்பிலும் மணிப்பூர் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ள நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழு தலைவர்கள் குடியரசுத் தலைவரை இன்று சந்தித்து மணிப்பூர் நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், மணிப்பூர் விவகாரம் தொடர்பான கோரிக்கை மனுவை குடியரசுத்தலைவரிடம் அளித்துள்ளனர்.
இந்த சந்திப்பில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திரிணாமுல் மூத்த தலைவர் டெரிக் ஓ ப்ரைன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் , நசீர் உசேன் உள்ளிட்ட எம்.பி.க்களும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, மணிப்பூர் விவகாரம் குறித்து அவர்கள் பேசியுள்ளதாக தெரிகிறது.
இந்த சூழலில், இந்திய கூட்டணி கட்சியினர் சந்திப்பதற்கு முன்பாகவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரௌபதி முர்முவை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் சந்திப்புக்கு முன்னர், அமித் ஷா சந்தித்தது முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








