கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் விம்பிள்டன் போட்டிகளில் ரோஜர் பெடரர், ஜோகோவிச் உள்ளிட்டோர் சாம்பியன் பட்டம் வென்று வந்த நிலையில் அவர்களை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக அல்காரஸ் வாகை சூடியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியமாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த இரு வாரங்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் அல்காரஸ் (ஸ்பெயின்)செர்பிய வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல்முறையாக பட்டம் வென்றார்.

இதுவரை விம்பிள்டன் டென்னிஸ் என்றாலே ரோஜர் பெடரர், ஜோகோவிச், ரஃபேல் நடால் மற்றும் ஆண்டி முர்ரே என்ற பெயரே கடந்த 2003 ஆண்டு முதல் இடம்பெற்று வந்தது. டென்னிஸ் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி உலகம் முழுக்க தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளார் அல்காரஸ். ரோஜர் பெடரர் 8 முறை (2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017)சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவர் 2003ஆம் ஆண்டு முதல் 2007 வரை தொடர்ந்து 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அதேபோல் நோவக் ஜோகோவிச் 7 முறை (2011, 2014, 2015, 2018, 2019, 2021, 2022) விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். ரபேல் நடால் இரு முறையும் (2008, 2010) ஆண்டி முரே இரு முறை (2013, 2016) பட்டம் வென்றுள்ளார். இந்த ஜாம்பான்களுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 7 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக அல்காரஸ் பட்டம் வென்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.





