“இளைஞர்களுக்குத் தேவைப்படும் stress buster மது அல்ல”- காவல் ஆணையர் ரவி

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தனியார் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக நடைபெற்ற மதுவிருந்தில் பங்கேற்ற 50 பெண்கள் உட்பட 500 பேரைப் பிடித்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில்…

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தனியார் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக நடைபெற்ற மதுவிருந்தில் பங்கேற்ற 50 பெண்கள் உட்பட 500 பேரைப் பிடித்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாவுக்கு சொந்தமான (Orchid Resorts) ஆர்ச்சிட் ரிசார்ட்டில் அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாகவும் அந்த மது விருந்தில் போதை மருந்து பயன்படுத்துவதாகவும் தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைத் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மது ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் இரவு 1 மணி முதல் விடிய விடியத் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த மேனஜர் சைமன் கைது செய்யப்பட்ட நிலையில் மது விருந்தில் கலந்து கொண்ட சுமார் 500 ஆண்கள், நடனமாடிய சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் சிறைபிடித்து வைத்தனர். மேலும் தகவல் அறிந்த வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலாளா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

இதன் பின்னர் தாம்பரம் காவல் ஆணையர் ரவி, அங்கு இருந்த இளைஞர்களிடம் இது போல் நடந்து கொள்ளக்கூடாது என்றும் இளைஞர்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம் என்றும் கூறினார். மேலும் இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இளைஞர்களுக்குத் தேவைப்படும் stress buster இது அல்ல நல்ல வழியைப் பயன்படுத்துங்கள் என்றும் அறிவுரை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.