உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டதாகக் கூறப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி புதிய வீடியோவில் தோன்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி விமானங்களை கடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகள், இரட்டை கோபுரத்தின் மீதும், அமெரிக்க ராணுவ தலை மையகமான பென்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர்.
இதில் சுமார் 3000 பேர் வரை உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் சுட்டு கொன்றது.
அவரைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக அய்மன் அல்-ஜவாஹிரி பொறுப் பேற்றார். உடல்நல குறைவு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக கடந்த ஆண்டு செய்திகள் வெளியாயின.
இந் நிலையில் இரட்டை கோபுர தாக்குதலின் 20-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் அய்மன் அல்-ஜவாஹிரி தோன்றி பேசினார். அதில், ’ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக் கப்படாது’என தெரிவித்துள்ளார்.








