ஹிட்லருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதா? – அகிலேஷ் யாதவுக்கு பாஜக கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடியை ஹிட்லருடன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஒப்பிட்டு பேசியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.  கடந்த சனிக்கிழமை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.…

பிரதமர் நரேந்திர மோடியை ஹிட்லருடன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஒப்பிட்டு பேசியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. 

கடந்த சனிக்கிழமை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“2014-ல் ஆட்சிக்கு வந்தவர்கள் 2024-ல் வெளியேறுவார்கள்.  ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டுகள் நீடித்தது.  அதுபோல் இவரும் 10 ஆண்டுகால ஆட்சியுடன் வெளியேற இருக்கிறார்” என மறைமுகமாக பிரதமர் மோடியை தாக்கி பேசியிருந்தார்.  இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜகவின் மூத்த தலைவரும்,  உத்தரப்பிரதேசத்தின் துணை முதலமைச்சருமான கேசவ் பிரசாத் மௌரியா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“பிரதமர் மோடி இந்தியாவில் மட்டுமல்ல,  சர்வதேசஅளவிலும் புகழ்பெற்ற தலைவர் என்பதை அகிலேஷ் யாதவ் மனதில் கொள்ள வேண்டும்.  உத்தரப்பிரதேசத்தில் பாஜக தொடர்ந்த வெற்றிகளைக் குவித்து வருகிறது.  வரும் மக்களவைத் தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும்.  சமாஜ்வாதி கட்சியின் குண்டர்கள் கும்பலுக்கு மீண்டும் தோல்வி கிடைக்கும்.  பிரதமர் மோடியை அவமதிப்பவர்களை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து உத்தரப்பிரதேச பாஜக தலைவர் புபேந்திர சிங் சௌத்ரியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில்,  “உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி தோல்வியடைய இருக்கிறது என்பது அகிலேஷுக்கு ஏற்கெனவே தெரிந்துவிட்டது.  எனவே, அவர் விரக்தியில் என்ன பேசுகிறோம் என்பதை உணராமல் செயல்படுகிறார்.  பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகரித்து வரும் செல்வாக்கால் அச்சமடைந்து அவதூறாகப் பேசி வருகிறார்.  பிரதமர் மோடி தலைமையில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.