உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய்பால் சிங் பங்கா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலக வங்கியின் தலைவராக 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸ், பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய தலைவர் நியமனம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோனை நடத்தினார். அதில், மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அஜய்பால் சிங் பங்காவை உலக வங்கியின் அடுத்த தலைவராக அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார்.
கடந்த மார்ச் 29 ஆம் தேதியுடன் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அஜய் பங்கா மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதை உலக வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அஜய் பங்கா ஐந்து ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை பூர்வீகமாகக் கொண்டவர் அஜய் பங்கா (63). இவர் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண் நிறுவனம் (ஐஐஎம்) ஆகியவற்றில் பொருளாதார படிப்புகளை முடித்தார். பின்னர், நெஸ்லே, பெப்சிகோ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய இவர், பல நிறுவனங்களில் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனை குழுவில் அஜய் பங்கா அங்கம் வகித்தார். மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 11 ஆண்டுகள் பணியாற்றினார். ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வரும் அஜய் பங்கா தற்போது உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







