உள்நாட்டு போர் காரணமாக சூடான் நாட்டில் வான்தாக்குதல் – 54 பேர் உயிரிழப்பு!

சூடான் நாட்டில் உள்ள தோரா கிராமத்தில் நடத்த வான்தாக்குதலில் 54 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு சூடான் நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகின்றார். அவருக்கு அடுத்து ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் பல்வேறு முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதன் காரணமாக ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் நிலவி வருகின்றது. இந்த நிலையில் வடக்கு டார்பூர் மாகாணத்தின் தலைநகரான எல்-பாஷருக்கு வடக்கே உள்ள தோரா கிராமத்தில் நேற்று முன்தினம் பயங்கர வான்தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த கொடூர தாக்குதலில் 54 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை ராணுவம் நடத்தியதாக துணை ராணுவம் குற்றம் சாட்டிய நிலையில் ராணுவம் அதை மறுத்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.